செவ்வாய், 9 மார்ச், 2010

கண்ணீர் குரல்

[வாழ்க்கை பயணத்தின் பதிவேட்டின்
இறுதிப்பக்கத்தில் குருதிச்சாயத்தால்
பதியப்பட்ட உயிர் மீள வரிகள்...]

கடந்த காலத்தின் இன்றைய நாள்
மாலைப்பொழுது மழையென
கணைகள் என் செவிகளை சல்லடை
இட்டுக்கொண்டிருந்தன நடுவே
யாகத் தீ..

தியாகங்களால் கொழுந்துவிட்டு
கனன்று கொண்டிருந்தது...

ஒற்றைத்தட்டில் உணவுண்ட
நட்புக்களின் உடல்கள் மண்ணின்
மடியில் மீண்டும் முளைப்போம்
என்ற மகிழ்வில் விதைந்து
கொண்டிருந்தன...

எங்கோ ஒரு தொலைவில்
ஒரு நட்பின் அழுகுரல்.
அண்ணா ...
அண்ணா ...

ஓடிச்சென்று என் கரங்கள்
பற்றிக்கொண்டன அந்த
கார்த்திகை மலரின் திரு
உடலை என் தோள்களில்
தங்கியபடி என் பயணம்...

அந்த மலரின் விழிகளில் வழிந்த
கண்ணீர்த்துளிகள் குருதியுடன்
கலந்து என் தோள்களை நனைத்தது
என் பயணங்களின் முடிவு
தொலைதூரம் என்பதால் என் நகர்வை
விரைவு படுத்தினேன்...

அந்த பயணத்தின் முடிவு எல்லையின்
விளிம்பை தொடுகையில் என் தோள்கள்
தங்கிய அந்த கார்த்திகை மலர் தன் ஜனனத்தை
முடித்துக்கொண்டது...

இன்றுவரை
ஒலித்துக்கொண்டிருக்கின்றது
அந்த கண்ணீர்க் குரல் ....

புதன், 17 பிப்ரவரி, 2010

கண்ணீர் துளிகள்

விழி என்ற ஊற்றின் நீரோட்டம்
மனம் என்ற காற்றால்
கரை முட்டும் உணர்வுகளின்
வடிவ வெளிப்பாடு
உணர்ச்சிகளின் கனத்த சாரல்
பாறங்களை குறைக்கும்
வெந்நீர் முத்து முத்தாய்கண்களில்
கரிக்கும் கண்ணீர் !!

நிழல் கூட மாலை நேரத்தில்
பிரியும்என் நினைவுகள்
உன்னை விட்டு என்றும் பிரியாது…